இனப்பெருமையோடும் மொழிப்பெருமையோடும் ” வாழ்நாள் விருது”

1965 ஆம் ஆண்டு முதல் 58ஆண்டுகளாக தமிழினத்தை பேரன்பு கொண்டு நேசித்த பேராசிரியர் முனைவர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களுக்கு இனப்பெருமையோடும் மொழிப்பெருமையோடும் கனடாவாழ் தமிழர்கள் வாழ்நாள் விருது வழங்கி மதிப்பளிப்பு செய்துகொண்டிருக்கிறார்கள்.
பேராசிரியர் விபுலாநந்தர் அடிகளாரை மானசீகக் குருவாக கொண்ட தமிழ்த்துறைப்பேராசிரியரான பாலசுந்தரம் இளையதம்பி ஐயா அவர்களை, தளிர் ஊடக குழுமத்தினர் தளிர் ஊடக பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் “வாழ்நாள் திறன் பாராட்டு விருது” வழங்கி மதிப்பளித்துள்ளார்கள்.இவ்விழா கடந்த 2054 மடங்கல் 10ஆம்நாள் வெள்ளிக்கிழமை (25.07.2023) நடைபெற்றது.இவ்விழா கனடா இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள சீன பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பேராசிரியர் தளிர் ஊடக தொடக்க உறுப்பினராகவும், தளிர் ஊடகக் காப்பாளராகவும் தளிர் ஊடக வளர்ச்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கிவரும் பெருந்தமிழர்.பேராசிரியரின் அளப்பரிய பெரும்பணி சிறப்போடு தொடர பறை ஊடகக் குழுமத்தினர் வாழ்த்துகிறோம்.
பேராசிரியர் முனைவர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் வாழ்நாள் செயல்திறன் பாராட்டு விழா 2054 கன்னி 2 ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு (17.09.2023) கனடா இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெறுகிறது.இவ்விழாவை சுவாமி விபுலாநந்தர் கலைமன்றம் கனடா அமைப்பினர் ஒழுங்கமைத்திருக்கிறார்கள்.
கனடாமண்ணில் விபுலாநந்தர் கலைமன்றத்தை நிறுவிய பெருமைக்குரிய பெருந்தகை பேராசிரியர் முனைவர் பாலசுந்தரம் இளையதம்பி ஐயா.
பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் இன்றுவரை வெளியிட்ட நூல்கள்:
1. 1979 ஈழத்து நாட்டார் பாடல்கள் மட்டக்களப்பு மாவட்டம்.
2. 1986 காத்தவராயன் நாடகம் – பதிப்பாசிரியர்
3. 1988 இலங்கை இடப்பெயர்- ஆய்வு 1
4. 1989இடப்பெயர் – ஆய்வு 2
5. 1989 ஈழத்துப் பதிப்புக்கலை வளர்ச்சியிலே சன்மார்க்க சபையின் பணிகள்
6. 1989 தமிழ் இலக்கியத்தில் மருத்துவக்கருத்துகள்.
7. 1990 ஈழத்தில் ஒப்பனைக்கலை
8. 1991 நாட்டார் இசை இயல்பும் பயன்பாடும்
9. 2002 ஈழத்து இடப்பெயர் – ஆய்வு யாழ்ப்பாண மாவட்டம்
10. 2003 தமிழர் திருமண நடைமுறைகள் மட்டக்களப்பு மாநிலம்
11. 2004 விபுலாநந்தம் – தமிழின மேம்பாடு நோக்கிய சிந்தனைகள்
12. 2005 ஈழத்து நாட்டார் பாடல்கள் மட்டக்களப்பு மாவட்டம் ஆய்வும் மதிப்பீடும்
13. 2006 தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்
14. 2008 பிள்ளைகளின் கல்விவளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு
15. 2008 Exploration in Sri Lanka Tamil Folklore
16. 2015 பண்டைத் தமிழர் பண்பாடு – புதியநோக்கு
17. 2015 Our village vallipuram Edited by Prof.E.Balasundram
18. 2017 கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்
19. 2019 தமிழர் நாட்டுப்புற இயல் களஞ்சியம்
20. 2021 மொழி இயலும் தமிழ்மொழி வரலாறும் – பதிப்பாசிரியர்
21. 2022 மொழியியற் பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் ஆய்வுகளும் புலமைத் திறன்களும்
22. 2023 சங்க இலக்கியம் -ஒரு கண்ணோட்டம்
பேராசிரியர் 1965 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழர் பண்பாடு ,வரலாறு இலக்கியம் தமிழ்மொழி வரலாறு,நாட்டுப்புறவியல் என தன் இனத்தைப் பற்றிக் படித்தும் படிப்பித்தும் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் மேற்கொண்டும் பெற்றதின் பட்டறிவும் பல்வேறு அறிஞர்களின் நூல்களின் வழிப்பெற்ற தெளிந்த அறிவும் அவரின் வாழ்நாள் விருதுக்கு உரித்தானார்.
1971ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக சேர்ந்தார்.
பேராசிரியர் பாலசுந்தரம் தமிழீழ மண்ணில் மட்டக்களப்பு நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்து ஆய்வுரை எழுதி முனைவர் பட்டம் பெற்றார்.
பேராசிரியர் பாலசுந்தரம் ஐயா தமிழ், வடமொழி, சிங்களம், ஆங்கிலம், மலையாளம் என ஐந்து மொழிகளில் புலமை கொண்ட பெருந்தமிழர்.
கனடாமண்ணில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியராகத் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றார். பல தமிழ்மொழிக் கல்வியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் பெருந்தகை.அடுத்த தலைமுறைக்கான தமிழ்மொழிக்கல்வியை வழங்குவதோடு ஊக்கப்படுத்தி வரும் பெரும்பண்பு கொண்டவர் பேராசிரியர்.
இனத்தின் பல்வேறு கூறுகளை ஆய்வு செய்வதற்கு வாழ்நாள் முழுக்கத் துணையாக இருக்கின்ற பேராசிரியர் அவர்களின் பேரன்புக்குரிய இணையர் ஆசிரியர் விமலா பாலசுந்தரம் அம்மையார் அதிஉயர் பாராட்டுக்குரியவர்.ஆணுக்குப்பெண் சமன் அல்ல.ஆணும்பெண்ணும் சமன் என்பதை எம்மோடு வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கின்ற இணையர் பாலசுந்தரம் அவர்கள் வாழ்நாள் விருதுக்குரிய பெருந்தகைகள்.
வாழ்க வளமுடன் பல்லாண்டு.
மு.க.தமிழ்
பறை ஊடகக் குழுமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *